கோவில் திருவிழா அழைப்பிதழில் ஜாதி பெயர் இடம் பெறக்கூடாது; உயர் நீதிமன்றம்
கோவில் திருவிழா அழைப்பிதழில் ஜாதி பெயர் இடம் பெறக்கூடாது; உயர் நீதிமன்றம்
ADDED : மார் 02, 2025 03:27 AM

மதுரை: 'கோவில் திருவிழா அழைப்பிதழில் ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடக்கூடாது. நன்கொடையாளர்களின் பெயர்கள் தேவையற்றவை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, நடுவிக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் பல்வேறு சமூகத்தினரால் நிறுவப்பட்டது. பங்குனி திருவிழா ஏப்ரலில் நடைபெறும். இதற்கான அழைப்பிதழில் மண்டகப்படிதாரர்களில் அந்தந்த ஜாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. எங்கள் சமூக பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதில், 'ஊரார்' என குறிப்பிட்டுள்ளதற்கு பதிலாக எங்கள் சமூக பெயரை அச்சிடும்படி அறநிலையத் துறை கமிஷனர், இணை கமிஷனர், கோவில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
திருவிழா நடத்துவதில் சமத்துவம், சமூக நீதியை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மனுவை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அறநிலையத்துறை தரப்பு: திருவிழாவின் முதல் நாளில் குறிப்பிட்ட சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் வழிபடுவர். 'ஊரார்' என்பது கிராமத்திலுள்ள மக்களை குறிக்கும் பொதுவான பெயர். குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குறிக்கவில்லை.
எந்த ஒரு சமூகத்திடமும் பாரபட்சம் காட்டுவதும் இல்லை; ஒதுக்குவதும் இல்லை. பிற சமூக பிரதிநிதிகள் பாரம்பரியமாக அனைத்து கிராம மக்கள் சார்பில் முதல் நாள் திருவிழாவிற்கு நிதியுதவி செய்தனர். எனவே, அழைப்பிதழில் அவர்களின் சமூக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெரிய ஜாதியினரும் வெவ்வேறு நாட்களில் மண்டகப்படி நடத்த பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகம் மட்டும் வெளிப்படையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வழிபடுவதற்கோ அல்லது திருவிழாவில் பங்கேற்பதற்கோ எந்த தடையும் இல்லை என, அறநிலையத் துறை தரப்பு வாதிடலாம்.
சந்தேகத்திற்கு இடமின்றி அக்கருத்தை ஏற்க நாங்கள் விரும்பவில்லை. பங்கேற்பு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்; வெறுமனே அடையாளமாக இருக்கக்கூடாது.
ஹிந்து மதத்தைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கி கோவில் திருவிழாக்களை கொண்டாட வேண்டும் என கருதுகிறோம்.
அந்த வரையறை, குறிப்பிட்ட ஜாதியையும் உள்ளடக்கியது. கோவில் அழைப்பிதழில் குறிப்பிட்ட ஜாதி பெயர்களை நிதி உதவி அடிப்படையில் மட்டும் குறிப்பிடுவது தேவையற்றது.
பங்குனி திருவிழா அழைப்பிதழில் நன்கொடையாளர்கள் அல்லது 'ஸ்பான்சர்'களின் பெயர்கள் தேவையற்றவை.
வரும் காலங்களில் இக்கோவில் விழாக்களின் அழைப்பிதழில் பல்வேறு ஜாதி மற்றும் சமூகங்களின் பெயர்களை அச்சிடக்கூடாது. தேவைப்பட்டால், நன்கொடையாளர்களை பாராட்டி தனிப்பட்ட முறையில் ஒப்புதல் சான்று அனுப்பலாம்.
பங்குனி திருவிழாவில் ஏதேனும் இடையூறு அல்லது சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், விழாவை சுமுகமாக நடத்த கலெக்டர், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.