ADDED : ஜூன் 09, 2024 02:25 AM
சென்னை: 'காவிரியை துாய்மைப்படுத்தும் திட்டத்தை, தமிழக அரசு தன் சொந்த நிதியில் செயல்படுத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்திஉள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் காவிரி ஆற்றை துாய்மைப்படுத்துவதற்கான, 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை செயல்படுத்த, மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து, ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. தமிழகத்தில் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றில் இருந்தும், காவிரியில் பெருமளவில் கழிவுகள் கலக்கின்றன.
காவிரியை துாய்மைப்படுத்த வலியுறுத்தி, 2017ல் ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை, விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டேன்.
புனித நதியாக போற்றப்படும் காவிரி, நச்சு நதியாக மாறி வருவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 11,250 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள, காவிரி துாய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதுமான நிதியை திரட்ட முடியாவிட்டால் சொந்த நிதியில் இருந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

