ADDED : மே 21, 2024 07:20 AM
காவிரி நீர்பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம் வெளியிட்ட அறிக்கை:
அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு நதிகளில் ஒன்றான சிலந்தியாற்றில், கேரள அரசு சில ஆண்டுகளுக்கு முன், பட்டிசேரி என்ற இடத்தில் தடுப்பணையை கட்டியது.
இதனால், அமராவதி அணைக்கு நீர் வரத்து குறைந்தது. பருவமழை பெய்தால் மட்டுமே, அணை நிரம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் கேரள அரசு, சிலந்தி ஆற்றின் குறுக்கே இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவாடா கிராம பகுதியில், அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடுப்பணை கட்டப்பட்டால், அமராவதி அணைக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று விடும். அமராவதி ஆறும் வறண்டு, ஆற்றை நம்பியுள்ள கரூர், திருப்பூர் மாவட்டங்களில், 55,000 ஏக்கர் பாசன நிலங்கள் தரிசாக மாறிவிடும்.
அமராவதி அணை பகுதியில் உள்ள, முதலை பண்ணையும் காணாமல் போய்விடும். கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பதை, தமிழக அரசு தடுக்காவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

