ஊட்டி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி., பதிவு காட்சிகள்: டி.வி., திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு
ஊட்டி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி., பதிவு காட்சிகள்: டி.வி., திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு
UPDATED : ஏப் 27, 2024 10:04 PM
ADDED : ஏப் 27, 2024 08:00 PM

ஊட்டி:ஊட்டி ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி., பதிவு காட்சிகள் டி.வி., திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு ஏப்., 19ம் தேதி நடந்தது. ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் தொகுதிகளில் அமைக்கப்பட்ட, 1619 ஓட்டு சாவடி மையங்களினின் ஓட்டுப்பதிவு முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு வந்து ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
கல்லூரி ஸ்ட்ராங் ரூம் வளாகத்தை சுற்றி, 180 சி.சி.டிவி., கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டு அறை மூலம், 24 மணி நேரம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதை, அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள், ஓட்டு எண்ணும் மையத்தில் தங்கி இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை டி.வி., மூலம் பார்வையிட்டு கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலை முகவர்கள் அமரும் இடத்தில் சி.சி.டி.வி., கேமரா பதிவுகள் திடீரென டி.வி., திரையில் ஒளிபரப்பாகாமல் போய்விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து அங்குள்ள தொழில் நுட்ப பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா சம்போ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அருணா கூறியதாவது, சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் தொழில் நுட்ப கோளாறு காரணமாக டி.வி., யில் மட்டும் வெளியாகவில்லை. 20 நிமிடத்தில் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் இயங்கி வருகிறது . என்றார்.

