காட்டில் தாயை பிரியும் குட்டி யானைகளை வேறு கூட்டத்துடன் சேர்ப்பதை எதிர்த்து வழக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
காட்டில் தாயை பிரியும் குட்டி யானைகளை வேறு கூட்டத்துடன் சேர்ப்பதை எதிர்த்து வழக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜூன் 09, 2024 02:38 AM
சென்னை: தாய் யானையை பிரியும் குட்டிகளை, வேறு யானை கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த மனு:
தாய் யானையை குட்டிகள் பிரியும் நிகழ்வுகள், சமீப காலமாக நடந்துள்ளன. இந்த குட்டிகளை, வேறு யானை கூட்டத்துடன் சேர்த்து வைக்க வனத்துறை முயற்சிக்கிறது.
அந்த குட்டி யானைகளை, மற்றொரு கூட்டம் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு, 5 சதவீதம் தான் என, மறைந்த யானைகள் நிபுணர் அஜய் தேசாய் தெரிவித்துள்ளார்.
எனவே, தாயை பிரியும் குட்டி யானைகளை, வேறு ஒரு யானை கூட்டத்துடன் சேர்ப்பதற்கு பதில், நான்கு அல்லது ஐந்து குட்டி யானைகளை சேர்த்து, ஒன்றாக வளர்த்து பின், வனத்தில் விட உத்தரவிட வேண்டும்.
அதேபோல், வால்பாறை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குட்டியை, சுயமாக வேட்டையாடும் வகையில், தேவையான அளவில் நிலத்தில் வளர்த்து வனத்தில் விட வேண்டும்.
வன விலங்குகளுக்கு சிகிச்சை வழங்கவும், மறுவாழ்வு வழங்கவும், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற கால்நடை டாக்டர்கள் அடங்கிய, நவீன மருத்துவ வசதியை ஏற்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
இதேபோல், 'தமிழகத்தில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்.
'கோவை சாடிவயல் பகுதியில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என்று, முரளிதரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

