வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: ஐ.நா., அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு
வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: ஐ.நா., அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்பு
ADDED : மார் 29, 2024 01:36 AM

புதுடில்லி: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஐ.நா., அமைப்பு வெளியிட்ட தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்புமின்மை தொடர்பாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், இந்தியாவில் உள்ள இளைஞர்கள், 83 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2022ம் ஆண்டு நிலவரப்படி படித்த இளைஞர்களில் வேலைவாய்ப்பின்றி உள்ளோர் எண்ணிக்கை 54.2 சதவீதத்தில் இருந்து 65.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பின்றி அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையை போக்க, வேலைவாய்ப்பை உருவாக்குவது, அதன் தரத்தை மேம்படுத்துவது, பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவது போன்ற செயல்பாடுகளில் இந்திய அரசு கவனம் செலுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளில் 80 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை குறிப்பிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனினும், இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள தரவுகளை மறுக்கும் வகையில் மத்திய இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தனியார் டி.வி., நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:
நம் நாட்டில் உள்ள பலர், சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் தரவுகளை தான் நம்புகின்றனர். இது ஒரு வகையில், அடிமைத்தனத்துடன் இருக்கும் மனப்பான்மையையே காட்டுகிறது. நம் மக்கள், அதிலிருந்து விடுபட வேண்டும். உள்நாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தரவுகளையும் அவர்கள் சமமாக பொருத்தி பார்க்க வேண்டும்.
சமீபத்திய உள்நாட்டு தரவுகளின்படி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 6.40 கோடி பேர் புதிதாக பதிவிட்டு உள்ளனர். இது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்.
இது தவிர, வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் நோக்கம், வேலை தேடும் இளைஞர்களை, வேலை வழங்கும் இளைஞர்களாக உருவாக்குவதே ஆகும். இதன் வாயிலாக, இதுவரை 34 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் பதவியேற்றதில் இருந்து, தொழில்முனைவோருக்கு உதவும் கொள்கைகளை உருவாக்கி வருகிறார். இது, அரசு சார்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றொரு வழிமுறையாகும். இப்போது உள்ள இளைய சமுதாயத்தினர், ஸ்டார்ட் - அப் நிறுவனங்களை அதிகளவு துவங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

