ADDED : ஏப் 10, 2024 11:58 PM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் கம்மாத்தி பகுதியை சேர்ந்தவர் தாமஸ், 62. முன்னாள் ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவரான இவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். இவர், விவசாயம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட தொழில்கள் செய்கிறார். இவருக்கு காம்மாத்தி பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது.
நேற்று காலை, 11:00 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள், கம்மாத்தியில் உள்ள தாமஸ் வீட்டுக்கு சென்று, சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அது தொடர்பாக தாமசிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து 3:30 மணிக்கு, ஒரு காரில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். மற்றொரு காரில் வந்த அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இரவு, 7:30 ----மணிக்கு பிறகும் சோதனை பணி தொடர்ந்தது. ஆய்வு மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் குறித்து அதிகாரிகள் ஏதும் தெரிவிக்கவில்லை.

