ADDED : ஏப் 01, 2024 06:13 AM
சென்னை: வளிமண்டல கீழடுக்கில் காற்று வீசும் திசை மாற்றத்தால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்குகளில், காற்று வீசும் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதனால், வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று பகல் வரையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களில் இன்று முதல், 2ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். அதேநேரம், தமிழகத்தின் வடக்கு பகுதி மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
நாளை மறுதினம், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

