ADDED : செப் 01, 2024 07:01 AM

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே, கலிங்கப்பட்டினத்திற்கு அருகே நேற்று நள்ளிரவு கரையை கடந்தது.
இன்றும், நாளையும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்களில் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
வரும் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, கோவை மாவட்டம் சோலையார் பகுதியில் தலா 9 செ.மீ., மழை பதிவானது.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு பகுதியில் தலா 7; தக்கலை, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.