ADDED : ஏப் 05, 2024 08:30 PM
சென்னை:நாளை வரை வெயில் வாட்டும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில், நேற்று முதல் நாளை வரை, மாநிலம் முழுதும் கோடை வெயில் கொளுத்தும்; மழைக்கு வாய்ப்பில்லை என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
ஆனால், தென்மாநில பகுதிகளில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், பல இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, சிற்றாறு, 4; சிவலோகம், திற்பரப்பு, 3; சுருளக்கோடு, பேச்சிப்பாறை, 2; பெருஞ்சாணி அணை, சோலையார், தக்கலையில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலை நிலவும். நாளை முதல், 9ம் தேதி வரை, கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

