கார் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
கார் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : ஆக 07, 2024 02:08 AM
சென்னை:கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் கூட்டாளிகள் நான்கு பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த, 2022, அக், 23ல், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார்.
சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா கூட்டாளிகள், 17 பேரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துஉள்ளனர்.
இவர்களில், சென்னையைச் சேர்ந்த ஜமீல் பாஷா உமரி, மாவட்ட அளவில் ரகசிய கூட்டங்களை நடத்தி, அரபு மொழி வகுப்புகள் வாயிலாக பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வந்தார்.
கோவை பொன்விழா நகரைச் சேர்ந்த முகமது உசேன், குனியமுத்துாரைச் சேர்ந்த இர்ஸாத் ஆகியோர், கோவையில் அரபிக் கல்லுாரியில் ஆசிரியராக பணியாற்றி, பயங்கரவாதம் தொடர்பான வகுப்புகளை நடத்தி உள்ளனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் உமரி, குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் வலது கரமாக செயல்பட்டுள்ளார். இவர்கள் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.