'சாட்டை' துரைமுருகன் கைது: தமிழக அரசுக்கு சீமான் சவால்
'சாட்டை' துரைமுருகன் கைது: தமிழக அரசுக்கு சீமான் சவால்
ADDED : ஜூலை 12, 2024 05:59 AM

திருச்சி : விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், தமிழக அரசு பற்றியும் அவதுாறாக பேசிய, நாம் தமிழர் கட்சி நிர்வாகி 'சாட்டை' துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட அபிநயாவை ஆதரித்து பிரசாரம் செய்தார், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் சாட்டை துரைமுருகன்.
அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், தமிழக அரசு குறித்தும் அவதுாறாக பேசியுள்ளார். அந்த பேச்சை, சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க., - ஐ.டி.,விங் செயலர் அருண் என்பவர், துரைமுருகன் மீது, திருச்சி மாவட்ட 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார்.
ஆட்சேபம்
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று காலை, தென்காசியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்து, திருச்சி அழைத்து வந்தனர்.
திருச்சி சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைதை ஏற்காத நீதிபதி அவரை விடுவித்தார்.
இந்த கைது நடவடிக்கைக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து, சென்னையில் நேற்று பேட்டியளித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர் அளித்த பேட்டி:
சாட்டை துரைமுருகன் என்னைவிட அதிகமாக பேசவில்லை; அவதுாறாகவும் பேசவில்லை. கருணாநிதியை விமர்சித்து ஏற்கனவே இருந்த பாட்டைத்தான் பாடினார். பாடலை எழுதியவர், பாடியவரை விட்டு விட்டு, மீண்டும் எடுத்து வந்து பாடியவரை கைது செய்துள்ளனர்.
கருணாநிதி என்ன இறைத்துாதரா, இயேசுவா அல்லது பகவான் கிருஷ்ணனா? 'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி; சதிகாரன் கருணாநிதி; சண்டாளன் கருணாநிதி' என நான் பாடுகிறேன்.
கருணாநிதி பற்றிய பாடலை பாடுகிற என்னை கைது செய்து பாருங்கள். பிள்ளைப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் நீங்கள், தேள், பாம்பு, சிங்கம், புலியோடு விளையாட முடியுமா?
அதிகாரம் வந்தபின், கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது. ஊழல், கொலை, கொள்ளை, லஞ்சம், சாராயம் உள்ளிட்டவை, அவரது ஆட்சியில்தான் வந்தது.
பதிவுகள் உள்ளன
எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, அவர், அப்போதைய முதல்வர் பழனிசாமியை பற்றி பேசிய பதிவுகள் எல்லாம் இருக்கிறது. ஆட்சியாளர்களின் அவப்பெயர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் பலியாடுகளாக ஆக்குகின்றனர். கேட்டால் மேலிடத்தின் அழுத்தம் எனக் கூறுகின்றனர்.
யார் அந்த மேலிடம் என்றால் உதயநிதி தான். போலீஸ் அதிகாரிகளை மாற்றுவது முதல், தேவர், நாடார், யாதவர் என அனைத்து ஜாதியினரையும் விரட்டி விரட்டி கைது செய்ய வைப்பது அந்த நபர்தான்.
முடிந்தால், அதிகாரத்தில் இருப்போர் என்னைக் கைது செய்யட்டும். என்னைச் சுற்றி இருப்பவர்களை கைது செய்து, எனக்கு நெருக்கடி கொடுப்பதாக நினைத்து, சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கூறினார்.

