ADDED : மார் 30, 2024 05:57 AM

காலேஜ் ஈவன்ட்ஸ்சில் நாங்க பிஸி
காலேஜ் எக்ஸ்போக்களில் கூட பெட் ஈவன்ட் ஸ்டால்ஸ் தான் இப்பல்லாம் டிரெண்டாகிட்டு வருது. இங்க பப்பிஸ் உடன் செல்பி, வீடியோ எடுத்து, இன்ஸ்டா மாதிரியான சோசியல் மீடியாக்களில், ஹார்ட்டீன் எமோஜிக்களை அள்ளுவது தான் இளசுகளின் பொழுதுபோக்கு. சமீபத்தில் கோவையில், ஒரு தனியார் கல்லுாரியில், நடந்த பெட் ஈவன்ட்டுக்கு, ஸ்டூடன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. கென்னல் அட்ரஸ் விசாரிச்சு விசிட் அடிச்சோம்.
கோவை, சரவணம்பட்டி அடுத்த கீரணத்தத்தில் ஆள்நடமாட்டமே இல்லாத பகுதியில், 'ட்ரீம் பெட் ஹவுஸ்' என்ற பலகையுடன் பளீச்சிட்டது அந்த கென்னல். கல்லுாரி முடித்தவர்கள், படித்து கொண்டிருப்பவர்கள் என, இளவட்டங்கள் சேர்ந்து இக்கென்னல் உருவாக்கினோம் என்றார், அதன் ஓனர் சிவா.
''என் வீட்டுல இருந்த பப்பிக்காக தான் கென்னல் அமைக்க இடம் தேடுனேன். என் பட்ஜெட்டுக்கு இந்த இடம் கிடைச்சுது. நானும் மாரி, தர்ஷன்னு காலேஜ் படிக்கற பசங்க சேர்ந்து செடி வளர்த்து, கென்னல் செட்டப் உருவாக்குனோம். சின்னதா ஒரு வீடு கட்டி இங்கே தங்க ஆரம்பிச்சோம். பிரெண்ட்ஸ் தெரிஞ்சவங்க வெளியூர் போகும் போது, அவங்க டாக்ஸ, என் கென்னல்ல தங்க வச்சாங்க. இப்படி தான், ட்ரீம் பெட் ஹவுஸ் உருவாச்சு''னு ஆர்வமாய் தெரிவித்தார் சிவா.
டாக் ஷோ, பெட் ஈவன்ட்டுன்னு இப்ப நாங்க ரொம்ப பிசின்னு, சிவா தோளில் கைப்போட்டபடி பேச்சை தொடர்ந்தார் தர்ஷன். ''காலேஜ் ஈவன்ட்ஸ்ல, எங்க கென்னல் பேர்ல ஸ்டால் எடுத்து, பிரெண்ட்லி டாக்ஸ் மட்டும் கொண்டு போவோம். பெட் விரும்பாத யூத் இருப்பாங்களா?. செல்பி எடுப்பது, வீடியோ எடுப்பதுன்னு, நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும். இது மூலமா, நிறைய டாக் லவ்வர்ஸ் உருவாகிட்டு இருக்காங்க'' என்றார்.
இங்க வேற என்னெல்லாம் இருக்குனு கேட்டோம்.
''20 டாக்ஸ் தங்க வைக்கற அளவுக்கு இடவசதி இருக்கு. போர்டிங் மட்டுமில்லாம, ஸ்விம்மிங், குரூமிங், ஸ்பா, ப்ரீடிங்னு, பெட் லவ்வர்ஸ் தேடுற எல்லாமே இருக்கு. டாக் சேல் பண்றோம். எங்ககிட்ட இருந்து, போலீஸ் டாக் ஸ்குவாடுக்கு, 5 டாக்ஸ் போயிருக்குனு, கென்னல் ஆக்டிவிட்டிஸ் பத்தி விளக்கினார் சிவா. நான்கு ஸ்கூட்டர்களில் இளைஞர் பட்டாளம் வந்திறங்கியது. பிளே ஏரியாவில், இருந்த சில டாக்ஸ் உடன் விளையாட களமிறங்கினர்.
சரிதான், ஜாலியா ஒரு என்டர்டெய்ன்மென்ட் பிசினஸ்; சூப்பரா இருக்கே...!
இவ்ளோ வெரைட்டியா... 'ஏசி'ல தான் வளர்க்கணுமாம்
'பிஷ் லவ்வர்ஸ் விரும்புற வெரைட்டிகளை வலைவிரிச்சு தேடி வைச்சிருக்கேன். வழக்கமான மீன்களே என்னோட கலெக் ஷன்ல இல்ல; கடல்லேயே இல்லயாம்கிற வெரைட்டியா பார்த்து வெளிநாடுகள், வேற மாநிலங்கள்ல இருந்து, இறக்குமதி பண்ணி வச்சிருக்கேன். ஒவ்வொரு மீனுக்கும் யுனிக் கலர், பிசிக்கல் சிஸ்டம், புட் ஹாபிட் இருக்கு. இந்த மாதிரி மீன்களை தேடி வாங்குறவங்க எண்ணிக்கை அதிகம்' என்கிறார் கோவையை சேர்ந்த, மீன் பண்ணை உரிமையாளர் சஞ்சய்.
சில அரியவகை மீன்கள்
அராபைமா கிகாஸ்: இது கிட்டத்தட்ட, 13 அடி நீளம், 200 கிலோ எடை வரை வளரும். யானை பசிக்கு சோளப்பொறிங்கற மாதிரி இதுக்கு பசிச்சா, மற்ற மீன்கள், நத்தை, பறவையை கூட சாப்பிடும். ரெட், ஆரஞ்சு கலர் மீன்களுக்கு ரொம்ப கிராக்கி. இதை தொட்டியில வளர்க்கும்பட்சத்துல சிக்கன் ஹார்ட், பிஷ், நத்தை சாப்பிட கொடுக்கலாம். தண்ணியில இருக்கற ஆக்ஸிஜனையே சுவாசிக்கறதால, டேங்குக்கு மோட்டார் தேவைப்படாது.
ரெட் மொசைக் சன்னா: இதோட கலருக்கே, எவ்வளவு வேணும்னாலும் விலை கொடுத்து வாங்கலாம். ரெட், மயில் பச்சை கலர்ல, நெருக்கமாக இறக்கை, வால் இருக்கறதால தண்ணீல நீந்துறத பார்த்துக்கிட்டே இருக்கலாம். இத, ஏசி ரூம்ல வளர்க்கணும். ஐஸ் வாட்டர் தான், இதோடு ஸ்கின்னுக்கு நல்லது. கிட்டத்தட்ட 5 செ.மீ., இருக்கற ஒரு பிஷ்ஷோட விலை, 2,500 ரூபாய்.
பிளாட்டினம் அலிகேட்டர் கர்: பேருக்கு ஏத்தமாதிரி ஸ்கின்னும் ஒயிட்டா, கிளிட்டர் மாதிரி மின்னும். இதோட பற்கள் ரொம்ப ஷார்ப். ஈஸியாக மீன்களை புடிச்சு சாப்பிடும். முதலை மாதிரி, உருவம் இருக்கும். இதேமாதிரி, மஞ்சள், கோல்டன் கலர்ல இருக்க, கோல்டன் அலிகேட்டர் கர்ரோட, மார்க்கெட் வேல்யூ அதிகம். வளர்ந்த ஒரு கர் வெரைட்டி பிஷ் வெறும், 5.8 லட்சம் ரூபாய்.
லோச்: பார்க்க புழு மாதிரி இருக்கும் லோச் மீன்களில், 1,249 வெரைட்டி இருக்கு. தொட்டியில் இருக்கும் பாசான், டிரை பிஷ் புட் தான், விரும்பி சாப்பிடும். தனிமைய விரும்பாததால, கூட்டமா மற்ற மீன்களோட சேர்த்து வளர்க்கலாம். தொட்டி அடியிலயே தான் இருக்கும். நீந்தும் போது கூட, மேல அதிகம் வராது. ஆனா, ஓனர் வரும்போது, குஷியாகி நீந்த தொடங்கிடுமாம். ரொம்ப இன்டெலிஜென்ட்டான இந்த பிஷ், ரேர் வெரைட்டிங்கறதால, உடனே சேல் ஆகிடும்.
'லகு- பிகு' தெரியுமா உங்களுக்கு?
'ஒருவன் ஒருவன் முதலாளி...' பாட்டுல, ரஜினி ஸ்டைல்லா வெள்ளைக்குதிரை ஓட்டுறாரேன்னு நினைச்சு, நீங்களும் குதிரை வாங்குனா, அதுகிட்ட உதை வாங்குறத யாராலும் தடுக்க முடியாதுன்னு' குபீர் சிரிப்புக்கு பின் சொன்னார் குதிரைப் பயிற்சியாளர் சந்திரசேகரன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, குதிரைக்கு குரூமிங் செய்வது, லாடம் கட்டுவதில் அனுபவம் கொண்டவர்.
ஸ்பீடு தான், குதிரை மேல பலருக்கு கிரேஸ் வர்றதுக்கு காரணம். பந்தயத்துக்காகவும், பெட்டாவும், குதிரை வாங்கி வளர்க்க ஆசைப்பட்டா, இதிலெல்லாம் கட்டாயம் கவனம் செலுத்தணும் என்கிறார், பயிற்சியாளர் சந்திரசேகரன்.
'' குதிரை வாங்கறதுக்கு முன்னாடி அதுமேல ஏறி சவாரி செய்ய பயிற்சி எடுக்கணும். 'வாரத்துல ரெண்டு நாள் கோர்ஸ்' ங்கற விளம்பரங்கள பார்த்து நம்பி, பணம் கட்டி ஏமாந்துடாதீங்க. குதிரை மேல பயம் இல்லாம ஏறி உட்காரவும், உங்க பக்கத்துல, அது வந்து நிக்க பழகறதுக்குமே, ஒரு மாசம் ஆகிடும். குதிரைய கட்டி வைக்க தனியிடம் இருக்கணும்; பராமரிப்பு முறைகள் தெரிஞ்சிக்கணும்.
சுழற்சி முறையில, உணவு கொடுத்துக்கிட்டே இருக்கணும். குதிரையோட ஆரோக்கியமே, 'மேய்க்கறதுல பாதி; தேய்க்கறதுல மீதி'ன்னு, ஒரு பழமொழியே இருக்கு. அதோட உடம்புல முடிக்கு அடியில வெள்ளையா படர்ந்திருக்கறதை தினமும், தேய்ச்சி விடணும். குதிரையோட கால் அடிப்பகுதி 'குளம்பி' தேயாம இருக்க, வளைவான இரும்புதகடு வச்சி, லாடம் அடிக்கணும். குதிரை வளர வளர லாடத்தை மாத்தணும். குதிரையோட நகத்தை முறையா வெட்டணும். இதெல்லாம் செய்தா, குதிரைக்கு நீங்க தான் எஜமான்,'' என்றார்.
பெட் கேர் இன்சூரன்ஸ்; இனி, நோ டென்ஷன்
'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல... அதையும் தாண்டி'ங்கற பேக்ரவுண்டு சாங்கை அலறவிட்டு, தன் செல்லப்பிராணிகளை கொஞ்சுவது போன்ற வீடியோக்கள் தான், சோசியல் மீடியாக்களில் அதிக லைக்குகளை குவிக்கின்றன.
இப்படியான உணர்வைத்தரும் பெட்ஸ்களின் ஆபத்தான தருணங்களில், 'நாங்க இருக்கோம்'னு ஓனர்களின் கரங்களை இருகப்பற்றுகின்றன, இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள்.
ஆம்! நம்மைப் போல செல்லப்பிராணிகளுக்கும் மெடிக்கல் எமர்ஜென்சிக்கு, இன்ஸ்சூரன்ஸ் பாலிசிக்கள் கைகொடுக்கின்றன.
3 மாதம் முதல் 10 வயது வரையிலான நாய், பூனைகளுக்கு, இந்த பாலிசிக்கள் பொருந்தும்.
திருடு போனால் விளம்பரப்படுத்துதல், சன்மானம் கொடுப்பதற்கு, கிளைம் செய்யலாம்.
உங்க செல்லப்பிராணி வெளியாட்களை கடித்துவிட்டால், அவர்களின் மெடிக்கல் பில்லும் இதில் கவராகும்.
ஆன்லைன், ஆப்லைனிலும் இந்த பாலிசிக்களை பெறலாம். நிறுவனங்களுக்கு ஏற்ப, சில ஸ்கீம்கள் மாறுகின்றன.
அப்புறம் என்னங்க! 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்...'னு, தைரியமா சொல்லி, எகிறும் மெடிக்கல் செலவை, இனி ஈஸியா சமாளிக்கலாமே!
'பேர்ட்ஸ்' வளர்ப்பவரா அப்ப, இத படியுங்க!
பறவைகளுக்கான கூண்டில் வெவ்வேறு ரக பறவைகளையோ, வெவ்வேறு வயது கொண்ட பறவைகளையோ வைக்கக்கூடாது. ஏனெனில், ஒவ்வொரு ரக பறவைக்கும் வயது வாரியாக அதன் குணாதிசயம் மாறுபடும். தன் அலகை வலிமையாக்க, அவை கொத்திக்கொண்டே இருப்பதால், வயது குறைவான பறவைகளையும் சில நேரங்களில் கொத்தி ஆபத்து ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
தற்போது வெயில்காலம் என்பதால் நிழலான காற்றோட்டமான இடத்தில் தான் பறவை கூண்டை வைக்க வேண்டும். கூண்டில் கழிவுகள் சேராத வகையில், அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. குடிக்க சுத்தமான தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும்.
வெயிலுக்கு முன்பு உணவு கொடுக்க வேண்டும். கம்பு, திணை, கொத்தமல்லி மற்றும் கீரைகளை உப்புத்தண்ணீரில் கழுவிய பின் சாப்பிட கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில் 'விட்டமின் சி' நிறைந்த பழங்கள், கொடுப்பது நல்லது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பறவைகள், திடீரென சோர்வாகவோ, அதன் இறக்கைகள் பளபளப்பு இன்றி, மந்தமாக அசைத்தாலோ, நோய் அறிகுறியாக இருக்கலாம். உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
- டாக்டர் கே.கே. கீதா,
உதவி இயக்குனர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு, கோவை.

