சென்னை - கோவை சதாப்தி ரயிலில் மழைநீர் ஒழுகியதால் பயணியர் அவதி
சென்னை - கோவை சதாப்தி ரயிலில் மழைநீர் ஒழுகியதால் பயணியர் அவதி
ADDED : மே 14, 2024 04:31 AM

சென்னை: சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி விரைவு ரயில் பெட்டியில், மழைநீர் ஒழுகியதால், பயணியர் நேற்று அவதிப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சதாப்தி விரைவு ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. முழுக்க, 'ஏசி' வசதி உடைய சொகுசு ரயில் என்பதால், கோடை வெயிலில் நிம்மதியாக பயணம் செய்ய, கூடுதல் தொகை கொடுத்து, பலரும் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அருகே பீளமேடு பகுதியில் நேற்று, சதாப்தி ரயில் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்ததால், 'சி 7' பெட்டியினுள் மழைநீர் ஒழுகியது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர். ரயிலினுள் மழைநீர் கொட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பயணியர் சிலர் கூறியதாவது:
இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் சொகுசு ரயில் வகைகளில் ஒன்று சதாப்தி ரயில். சாதாரண மழைக்கே இந்த ரயிலில் பெட்டியில் மழைநீர் ஒழுகியது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும், மின்விளக்கு வழியாக மழைநீர் ஊற்றியதால், பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த ரயிலில் வழங்கும் உணவுகள் அளவு குறைவாகவும், சுவையின்றியும் இருக்கின்றன.
பராமரிப்பு பணி காரணமாக, இந்த ரயில் தாமதமாக இயக்குவது குறித்து, பயணியரின் மொபைல்போனுக்கு உரிய தகவலும் அளிக்கவில்லை. பயணியர் நலனை கருத்தில் கொண்டு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் பெட்டிகளை தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

