மனைவியின் சொத்துக்கள் பற்றி தகவல் தராத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு தந்தது செல்லும் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
மனைவியின் சொத்துக்கள் பற்றி தகவல் தராத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு தந்தது செல்லும் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
ADDED : பிப் 22, 2025 11:24 PM
சென்னை:'நீதித்துறை அதிகாரியை, மற்ற அரசு ஊழியர்களை போல கருத முடியாது' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தன் மனைவி வாங்கிய சொத்துக்கள் குறித்து தகவல் தராத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கியது செல்லும் என, தீர்ப்பளித்துள்ளது.
பணிநீக்கம்
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.குணசேகர். கடந்த, 2018ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் மீது, சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, 2020 ஏப்ரல், 8ல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அதே நாளில், விருப்ப ஓய்வு கேட்டு குணசேகர் அளித்த விண்ணப்பத்தை, சென்னை உயர் நீதிமன்றம், 2020 ஜூன், 3ல் நிராகரித்தது.
அத்துடன், அவருக்கு எதிராக, 2021 பிப்., 25ல் குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், குணசேகர் தன், 58 வயதை பூர்த்தி செய்ததால், 60 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என, தீர்மானித்த சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு, அவருக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்தது.
அதற்கு, சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் குழுவும் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, மாவட்ட நீதிபதி எஸ்.குணசேகருக்கு கட்டாய ஓய்வு அளித்து, தமிழக அரசு, 2021 ஆகஸ்ட், 23ல் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் குணசேகர் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியரின் வருவாய் ஆதாரத்தில் இல்லாமல், அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை.
'குடும்பத்தினர் வாங்கிய சொத்து விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற, உயர் நீதிமன்ற சுற்றறிக்கை, அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளது.
'எனவே, கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை ரத்து செய்து, உரிய பணப்பலன்களுடன் விருப்ப ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்' என, குணசேகர் வாதிட்டார்.
உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பில், 'நீதிமன்ற ஊழியர்களை மோசமாக நடத்தியது; மனைவி பெயரில், 25 அசையாச் சொத்துக்கள் வாங்கியது; பி.எம்.டபிள்யூ., சொகுசு கார் வாங்கியது போன்ற விபரங்களை, உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை.
உரிமை இல்லை
'குணசேகரனின் சம்பள கணக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பெருந்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது' என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் ஒரு நீதித்துறை அதிகாரி. அவர், உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய கடமைப்பட்டவர்.
கட்டாய ஓய்வு தொடர்பான விஷயங்களில் பின்பற்ற வேண்டிய அரசு உத்தரவுகள், தன் மீதான வழக்கில் பின்பற்றப்படவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல.
ஏனெனில், நீதித்துறை அதிகாரியாக இருக்கும் மனுதாரர், மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும் என்று வாதாட உரிமை இல்லை.
நீதித்துறை அதிகாரியை, மற்ற அரசு ஊழியர்களை போல கருத முடியாது. நீதித்துறை அதிகாரிகள், உச்சபட்ச நேர்மை மற்றும் பொறுப்பை கொண்டிருக்க வேண்டும் என, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டிஉள்ளது.
ஏழு நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு, ஆவணங்களை பரிசீலித்து, மனுதாரரை தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தால், அது பொது நலனுக்கு உகந்ததாக இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
எனவே, உயர் நீதிமன்ற நிர்வாகக்குழு முடிவில் தலையிட முடியாது; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.