சென்னை ஐ.சி.எப்., வருகிறது 'சிலீப்பர் வந்தே பாரத்' ரயில்
சென்னை ஐ.சி.எப்., வருகிறது 'சிலீப்பர் வந்தே பாரத்' ரயில்
ADDED : செப் 10, 2024 03:51 AM

சென்னை: படுக்கை வசதியுள்ள, 'வந்தே பாரத்' ரயில் தயாரிப்பு பணி முடிந்துள்ளதால், பெங்களூரில் இருந்து சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு கொண்டு வந்து, விரைவில் பல கட்ட சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
தற்போது 55 வழித்தடங்களில், 110 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், 'சேர் கார், எக்சிகியூடிவ் சேர் கார்' என அமரும் வசதியிலான இரண்டு வகை இருக்கைகள் மட்டுமே உள்ளன.
அந்த இருக்கைகள், நீண்ட நேர பயணத்திற்கு ஏற்றவாறு மிருதுவாக இல்லை என்றும், மிகவும் கடினமாக இருப்பதாகவும் பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய, சிலீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில், முதல் சிலீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த ஆண்டு துவங்கின. பணிகள் முடிந்துள்ளதால், இந்த பெட்டிகளை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த வாரம் ஆய்வு செய்தார்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சிலீப்பர் வந்தே பாரத் ரயில், பயணியரை வெகுவாக கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விரைவில் சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு கொண்டு வரப்பட்டு, இங்குள்ள ரயில் பாதையில் இயக்கி, பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அதன்பின், வேகமாக சோதனை ஓட்டம் நடத்தப்படும். இந்த ரயிலின் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப திறன், பயணியர் வசதிகள் குறித்து, வல்லுனர்கள் குழு ஆய்வு நடத்தி, சோதனை அறிக்கையை, ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் வழங்கும். அவரது ஒப்புதல் பெற்ற பின் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.