சென்னை, ராமநாதபுரத்தில் இருவேறு கோர விபத்து: பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
சென்னை, ராமநாதபுரத்தில் இருவேறு கோர விபத்து: பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு
ADDED : செப் 09, 2024 06:12 AM

சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில், பெண்கள், குழந்தைகள் உட்பட எட்டு பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
திருவள்ளூர், ராஜா வீதியை சேர்ந்தவர் ஜெயவேல், 52; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி உஷாராணி, 48.
இவர்கள், நேற்று காலை தன் இரட்டை குழந்தைகள் சாய்மோகித், 4, சாய் மோனிஷா, 4, ஆகியோருடன் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உஷாராணியின் தாய் வீட்டிற்கு வாடகை காரில் சென்றனர்.
தீவிர சிகிச்சை
திருவள்ளூர் - செங்குன்றம் சாலை வழியாக கார் சென்றது. பகல், 12:00 மணியளவில் அலமாதி அருகே சென்ற போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள மீடியனில் மோதியது.
இதில், காரின் முன்பகுதி முழுதும் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் திருவள்ளூரை சேர்ந்த டிரைவர் அனஸ், 30, உஷாராணி, சாய் மோனிஷா ஆகியோர், இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த ஜெயவேல், சாய்மோகித் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர்களின் சடலங்களை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்தவர் ராஜேஷ், 34; தங்கச்சிமடம் நடுத்தெருவில் குடும்பத்துடன் வசித்த அவர், அங்கு நகைக்கடையும் நடத்தினார். நேற்று முன்தினம் இரவு, பிறந்து 12 நாளான இவரது ஆண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அக்குழந்தையுடன், ராஜேஷ், மனைவி பாண்டிசெல்வி, 30, மகள்கள் ஹர்ஷிதா ராணி, 8, பிரனிகா ராணி, 4, பாண்டிசெல்வியின் தந்தை செந்தில் மனோகரன், 70, அவரது மனைவி அங்காளஈஸ்வரி, 65, ஆகியோர் ராமநாதபுரம் வந்தனர்.
அங்கு தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை எடுத்து விட்டு, பின்னர் வீடு திரும்புவதற்காக அங்கிருந்து வாடகை காரில் தங்கச்சி மடம் நோக்கி சென்றனர். காரை, அக்காள்மடம், புயல்காப்பகம் பகுதியை சேர்ந்த சவரி பிரிட்டோ, 33, என்பவர் ஓட்டினார்.
அப்போது, திருப்புத்துாரிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், பிரப்பன்வலசை அருகே சென்றபோது, அதில் பயணித்த போதை ஆசாமி ஒருவர் வாந்தி எடுத்ததால், டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
நேற்று அதிகாலை, ராஜேஷ் குடும்பத்தினர் சென்ற கார், நின்று கொண்டிருந்த அந்த பஸ்சின் பின் பகுதியில் அதிவேகமாக மோதி நொறுங்கியது.
இதில் , ராஜேஷ், ஹர்ஷிதாராணி, பிரனிகா ராணி, செந்தில் மனோகரன், அங்காளஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அங்கிருந்த மக்கள் கார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை மீட்டனர்.
பாண்டிசெல்வி, சவரி பிரிட்டோ, பச்சிளம் குழந்தை ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். உச்சிப்புளி போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் குழு -