ADDED : செப் 08, 2024 02:00 AM
சென்னை:சென்னை டூ மன்னார்குடி, 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்குவது குறித்து, பயணியர் கோரிக்கையை ஏற்று, ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 55 வழித்தடங்களில், 110 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - கோவை, எழும்பூர் - நாகர்கோவில், சென்னை - மைசூரு, எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை -- விஜயவாடா உட்பட ஏழு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள் உடைய இந்த ரயில்களுக்கு, பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால், பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க, பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், எழும்பூர் - மன்னார்குடி வழித்தடத்தில், வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என, ரயில்வேக்கு பயணியர் சங்கம் மனு கொடுத்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம், கேரளாவில் நெரிசல் மிக்க வழித்தடங்களில் படிப்படியாக, வந்தே பாரத் ரயில்களை இயக்கி வருகிறோம்.
பயணியரின் கோரிக்கையை ஏற்று, எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக மன்னார்குடிக்கு, வந்தே பாரத் ரயில் சேவை துவங்க ஆய்வு மேற்கொண்டுவருகிறோம். பயணியரின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து, இறுதி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.