ADDED : ஏப் 25, 2024 10:41 PM
சென்னை:சென்னையின் மின் நுகர்வு எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம், 4,335 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, கேரள மாநிலத்திற்கு இணையானது.
தமிழக மின் வாரியத்தின் சென்னை வட்டம் என்பது, பெருங்குளத்துார், பொன்னேரி, செங்குன்றம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
சென்னை மற்றும் புறநகரில் தான் வீடுகள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அனைத்து பிரிவுகளிலும் மொத்தம், 45 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர்.
எனவே, மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் தான் மின் நுகர்வு அதிகம் உள்ளது. தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டாக உள்ள சென்னையின் மின்நுகர்வு, மார்ச், ஏப்., மாதங்களில் தினமும், 3,700 - 3,900 மெகா வாட் என்றளவில் அதிகரிக்கிறது.
மாநிலத்தின் மின்நுகர்வு சுட்டெரிக்கும் வெயிலால், ஏப்., மே மாதங்களில் உச்சத்தை எட்டும். இம்மாதம், 18ம் தேதி, 20,341 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
அதே சமயம், சென்னையின் உச்ச மின் நுகர்வு, கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதத்தில் தான் அதிகரிக்கும். அதன்படி, 2023 ஜூன் 16ல் சென்னை மின் நுகர்வு, 4,300 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே உச்ச அளவாக இருந்தது.
இந்தாண்டு கோடை காலம் துவங்கியதில் இருந்து, வெயில் சுட்டெரிக்கிறது. அதனால், பல வீடுகளில் இரவில் மட்டுமின்றி பகலிலும், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகம் உள்ளது. அதற்கு ஏற்ப, மின்நுகர்வும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, சென்னையின் மின்நுகர்வு நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில், 4,335 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியது. இது பூர்த்தி செய்யப்பட்டது. இது, கேரள மாநிலத்தின் ஒரு நாள் மின் தேவைக்கு இணையானது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, தி.நகர், ராஜிவ் காந்தி சாலை, பிராட்வே, கிண்டி மற்றும் அம்பத்துார் எஸ்டேட் ஆகிய இடங்களில் பகலில் மின் நுகர்வு அதிகம் உள்ளது; இரவில் குறைவாக உள்ளது. ஏனெனில், அந்த இடங்களில் தொழில், வணிக நிறுவனங்கள் அதிகம்.
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கே.கே.நகர், ஆதம்பாக்கம் போன்ற குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில், இரவில் மின் பயன்பாடு அதிகம் உள்ளது.
கடுமையான வெயில், ஐ.பி.எல்., கிரிக்கெட் காரணமாக, 'ஏசி' சாதனம் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், இந்தாண்டில் ஏப்ரல் மாதத்திலேயே சென்னையின் மின் நுகர்வு, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

