'சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை அர்ச்சனை, தரிசனத்திற்கு கட்டணமில்லை'
'சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை அர்ச்சனை, தரிசனத்திற்கு கட்டணமில்லை'
ADDED : செப் 06, 2024 02:30 AM
சென்னை,:பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின், சிதம்பரம் நடராஜர் கோவில் வரவு- - செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களை சுற்றி பூங்கா அமைக்கப்படுகிறது. அனுமதி பெறாமல் கோவிலுக்குள் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.
வரி தாக்கல்
கடந்த 2008 முதல் 2014 வரை, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தது. அப்போது, கோவிலின் வருவாய், 3 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.
ஆனால், 2014ல் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிற்குள் கோவில் வந்த பின், 2.09 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் என, வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். தவறான நிர்வாகத்தால் வருவாய் குறைந்துள்ளது.
எனவே, கோவிலின் வரவு- - செலவை தணிக்கை மேற்கொள்ள கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் வாதாடியதாவது:
கோவில் நிர்வாகம் பொது தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின், பக்தர்கள் தரும் காணிக்கையை தீட்சிதர்களே எடுத்து செல்கின்றனர். அவர்களின் தவறான நிர்வாகம் காரணமாக, கோவில் வருமானம் குறைந்துள்ளது.
எனவே, அவர்கள் கட்டுப்பாட்டில் கோவில் வந்தது முதல் இன்று வரை, கோவிலின் வரவு- - செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அதிக வருவாய்
பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியதாவது:
கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது, பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டது. பூஜைகள், அர்ச்சனை, தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவற்றுக்கு, டிக்கெட் அச்சடித்து கட்டணம் வசூலித்ததால் அதிக வருவாய் கிடைத்தது.
தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோவில் வந்த பின் உண்டியல் அகற்றப்பட்டது. எந்தவித கட்டணமும், பக்தர்களிடம் இருந்து வசூலிப்பதில்லை.
பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, தீட்சிதர்கள் எடுத்து செல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்.
இவ்வாறு வாதாடினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிதம்பரம் நடராஜர் கோவில், 5ம் நுாற்றாண்டில், 44 ஏக்கர் பரப்பளவில் சோழர்களால் கட்டப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் இருந்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், நடராஜரை தரிசிக்க வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புராதன கோவிலை முறையாக பராமரிக்க பெருந்தொகை தேவை.
அப்படி இருக்கும் போது, சிதம்பரம் நடராஜர் கோவில் பராமரிப்புக்கும், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி தர என்ன வருவாய் ஆதாரம் உள்ளது? கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை தவிர, பொது தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளதா?
கோவிலில் இருந்த உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? பூஜைகள், அர்ச்சனை, தரிசனம், சிறப்பு தரிசனத்துக்கு என, பக்தர்களிடம் இருந்து கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லையா என்பது குறித்து, மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.
பொது தீட்சிதர்கள் தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின், 2014- - 15 முதல் 2023- - 24ம் ஆண்டுகள் வரையிலான வரவு- - செலவு குறித்த கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட விபரங்களை, வரும் 19ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்., 19க்கு தள்ளிவைத்தனர்.