ஓட்டுப்பதிவு சதவீதம் குளறுபடி தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
ஓட்டுப்பதிவு சதவீதம் குளறுபடி தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
ADDED : ஏப் 20, 2024 10:25 PM
சென்னை:''ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பதிவான ஓட்டுகளை கணக்கிட்டபோது, ஓட்டு சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
அவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'மாநிலத்தில் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவானது. குறிப்பாக சென்னையில், 67 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் பதிவாகி உள்ளது' என, தெரிவித்தார்.
அதன்பின் நள்ளிரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் 69.46 சதவீத ஓட்டுகள் பதிவானதாகவும், சென்னையில் மிகக் குறைந்த அளவு ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் முதலில் தெரிவித்த சதவீதத்திற்கும், நள்ளிரவு தெரிவித்த சதவீதத்திற்கும் இடையே, மிகப்பெரிய வித்தியாசம் அதிகம் இருந்தது. மொத்தம் 25 தொகுதிகளில், முதலில் தெரிவித்ததை விட, ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்திருந்தது.
பொதுவாக ஒவ்வொரு தேர்தலின்போது, இரவு தெரிவிக்கும் ஓட்டுப்பதிவு சதவீதம், மறுநாள் சற்று அதிகரிக்கும், முதல் முறையாக இம்முறை குறைத்து தெரிவிக்கப்பட்டது.
இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து, சத்யபிரதா சாஹு கூறியதாவது:
ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையங்களில் இருந்தும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வழியே, ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்த தகவல் பெறப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்து கூறுகையில், இது மாறுபடும் என தெரிவித்தேன்.
நள்ளிரவு 12:00 மணிக்கு மேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், 69.46 சதவீத ஓட்டுகள் பதிவானது தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் பதிவான ஓட்டுகள் விபரம், கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இப்பணி நேற்று இரவு வரை முடியவில்லை.
இப்பணி முழுமையாக முடியும்போது, சிறிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பணி முழுமை பெற்றதும், முழு ஓட்டுப்பதிவு விபரம் வெளியிடப்படும் என்றா்.

