ADDED : மார் 31, 2024 03:23 AM

'வாக்கிங்' சென்று முதல்வர் ஓட்டு சேகரிப்பு
சேலத்தில் நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டு முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். சேலம் நான்குமுனை சந்திப்பில் நடைபயிற்சியை துவங்கினார்.
சாலையோரம் உள்ள காய்கறி, பழம், பூ, கீரை வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார். அப்போது, 'செல்பி' எடுத்துக் கொள்ள ஆர்வமுடன் வந்த பெண்கள், ஸ்டாலின் அருகே அனுமதிக்கப்பட்டு எடுத்துக் கொண்டனர். அதேபோல் பலர் கைகுலுக்கி சென்றனர்.
அப்போது, 50 வயது மதிக்கத்தக்க பெண், முதல்வரை சந்தித்து பிரச்னையை முறையிட்டார்.
அப்போது பின்னணியில், 'ஸ்டாலின் குரல்' என ஒலித்த பாடல் சத்தம் அதிகமாக இருந்ததால், அப்பெண் பேசியது முதல்வருக்கு கேட்கவில்லை. அருகில் இருந்த சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், அப்பெண்ணிடம் மொபைல் எண்ணை வாங்கி கொண்டு, பிறகு தொடர்பு கொண்டு பேசுவதாக கூறி அனுப்பினார்.
தொடர்ந்து, பெரிய கடை வீதி சந்திப்பில் டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு சென்றார்.

