கல்விப் புரட்சி செய்தவர் முதல்வர் கெஜ்ரிவால் ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் புகழாரம்
கல்விப் புரட்சி செய்தவர் முதல்வர் கெஜ்ரிவால் ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் புகழாரம்
ADDED : செப் 05, 2024 09:02 PM

புதுடில்லி:“அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விட, ஆசிரியர்களை மேம்பட்ட பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப முன்னுரிமை அளிக்கும் ஒரே அரசு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுதான்,” என, கல்வி அமைச்சர் அதிஷி பேசினார்.
ஆசிரியர் தினம் நாடு முழுதும் நேற்று கொண்டாடப்பட்டது. தியாகராஜா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் 118 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி அமைச்சர் அதிதி பேசியதாவது:
நம் நாட்டில் ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுகின்றனர். குழந்தை ஆசிரியரிடம் இருந்துதான் அதிகம் கற்றுக்கொள்கிறது. உறைவிடப் பள்ளியில் ஆசிரியராக இருந்த அனுபவம் எனக்கு உண்டு. மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைப் பின்பற்றுவது, அவர்களின் நடத்தை மற்றும் பேச்சு ஆகியவற்றைக் காட்டுகிறது. இது ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. .
டில்லி அரசுப் பள்ளியின் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், 950 பேர் சிங்கப்பூரில் உள்ள தேசியக் கல்வி நிறுவனத்திலும், 1,700 பேர் ஆமதாபாத் ஐ.ஐ.எம்., நிறுவனத்திலும் பயிற்சி பெற்றுள்ளனர்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் கல்விப் புரட்சி செய்துள்ளார். இங்கு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை விட, ஆசிரியர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டில்லி அரசுப் பள்ளிகளில் சர்வதேச அளவில் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதேபோல, பள்ளிகளும், வகுப்பறைகளும் கூட தரமாக அமைக்கப்பட்டுள்ளன.
என் பெற்றோர் டில்லி பல்கலையில் ஆசிரியர்களாக இருந்தனர். அதனால் ஆசிரியர் தொழிலில் எனக்கு தனிப்பட்ட அனுபவம் உள்ளது. தரமான கல்வியின் மதிப்பை உணர்ந்துள்ளேன்.
ஆசிரியர்களை குரு என்ற ஸ்தானத்தில் நாம் வைத்திருக்கிறோம். நம் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி கல்வித் துறை இயக்குனர் ஆர்.என்.சர்மா பேசுகையில், “ஆசிரியர்கள் எப்போதும் மனதளவில் விழிப்புடனும், உணர்ச்சி ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் சிறந்து விளங்குகின்றனர். மாணவர்களை மேம்படுத்த உதவுகின்றனர்,”என்றார்.
விருது
துவாரகா 10வது செக்டார்- ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயாவின் அரசியல் அறிவியல் முதுகலை ஆசிரியர் பிரேம் குமார், பஸ்சிம் விஹார் செயின்ட் மார்க்ஸ் பள்ளி ஆசிரியர் நவீன் குப்தா, மாநகராட்சி பள்ளி முதல்வர் அஞ்சு சச்தேவ் உட்பட 118 ஆசிரியர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.