ADDED : ஜூலை 31, 2024 01:22 AM
சென்னை:'மேட்டூர் அணையில் இருந்து, உடனடியாக மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்றுமுன்தினம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இன்று முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
அரசு வெளியிட்ட அறிக்கை:
மேட்டூர் அணையில் இருந்து, கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில், பாசனத்திற்காக நீர் திறந்து விட, சேலம் எம்.பி., செல்வகணபதி, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், விவசாய சங்க பிரதிநிதிகள், முதல்வரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று, இன்று முதல் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சேலம் மாவட்டத்தில் 16,443; ஈரோடு மாவட்டத்தில் 17,230; நாமக்கல் மாவட்டத்தில், 11,327 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில், நேற்று முதல் டிச., 13 வரை, 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க., தரப்பில் கூறியதாவது:
மேட்டூர் அணியில் இருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில், பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று பழனிசாமி, மக்கள் நலனுக்காகத்தான் அரசிடம் கோரிக்கை வைத்து, அறிக்கை வெளியிட்டார். மக்கள் நலனுக்கான விஷயம் அதை செய்யலாம் என அரசுத் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்காக, முதல்வருக்கு நன்றி சொல்லலாம். ஆனால், அரசுத் தரப்பில் உத்தரவிடும்போது, அதற்கான பலன் முழுதும் அ.தி.மு.க.,வுக்கும் பழனிசாமிக்கும் போய் விடும் என்பதால், தங்கள் கட்சி சார்பிலும் ஒரு கோரிக்கை மனு பெற்று, அதன் அடிப்படையில் செய்தது போல, நீர் திறப்புக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். எங்களைப் பொறுத்த வரை, மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அவ்வளவுதான்.
இப்படியெல்லாம் யோசிக்க தி.மு.க.,வினரால் மட்டுமே முடியும்
இவ்வாறு அக்கட்சி தரப்பில் கூறினர்.
***

