UPDATED : மே 20, 2024 12:58 PM
ADDED : மே 20, 2024 01:28 AM

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் துாக்கத்தில் இருந்து விடுபட்டு, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து, தமிழகத்தின் நதி நீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு, தி.மு.க., அரசு அடகு வைத்துக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில், பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் முயற்சியில், கேரள கம்யூ., அரசு இறங்கியுள்ளது. இது, கண்டிக்கத்தக்கது.
இனியாவது, முதல்வர் ஸ்டாலின் துாக்கத்தில் இருந்து விடுபட்டு, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

