'சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்' : ஓபிஎஸ்
'சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்' : ஓபிஎஸ்
ADDED : மே 06, 2024 12:39 AM

சென்னை: 'சட்டம் - ஒழுங்கு பிரச்னையில், முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்த வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் சமூக விரோதிகளின் புகலிடம் என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சொல்லும் அளவுக்கு, தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து காணப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொலை மிரட்டல் வருகிறது என, முன்கூட்டியே போலீஸ் துறைக்கு புகார் கொடுத்தும், தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., மாவட்ட தலைவர் எரித்து கொலை செய்யப்படுகிறார்.
அந்த அளவிற்கு அலட்சிய போக்குடன் தி.மு.க., அரசு செயல்படுகிறது. போதிய பாதுகாப்பை அளித்திருந்தால், இந்த கொலை நிகழ்ந்திருக்காது.
சமூக விரோதிகளை வன்முறையாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும் உறுதியான அரசு அமைய வேண்டும்.
எனவே, சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பன்னீர்செல்வத்தின் மற்றொரு அறிக்கை:
சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வரும் முதியவரிடம், தி.மு.க., கவுன்சிலர் சமீனா செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தராததால், அவரை தாக்கியுள்ளனர். அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மக்கள் பிரதிகளே, மக்களை தாக்குவது என்பது வேலியே பயிரை மேய்வதற்கு சமம். முதல்வர் ஸ்டாலின் உடனே தலையிட்டு, கவுன்சிலர், அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.