ஆதரவற்ற மனநலம் பாதித்தோர் இல்லாத தமிழகம் கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
ஆதரவற்ற மனநலம் பாதித்தோர் இல்லாத தமிழகம் கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : பிப் 28, 2025 12:19 AM

சென்னை:தமிழகத்தில், ஆதரவற்ற மனநலம் பாதித்தோர் இல்லாத நிலையை உருவாக்க, தமிழ்நாடு மாநில கொள்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில், 15.81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, 25 போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் திறந்து வைத்தார்.
'ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலன் காக்கும், தமிழ்நாடு மாநில கொள்கை - 2024'ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஆதரவற்ற நிலையில், சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை, அடையாளம் கண்டு மீட்பது உள்ளிட்ட அணுகுமுறை குறித்த நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன
இச்சேவையில் ஈடுபடும், பல்வேறு துறைகளின் அலுவலர்களின் பொறுப்புகள் குறித்த வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு, அவசர சிகிச்சை, இடைநிலை மருத்துவ கவனிப்பு, நீண்டகால பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டும் இணைதல் உள்ளிட்ட நான்கு நிலைகளிலான கவனிப்பு வரையறுக்கப்பட்டுஉள்ளது
சிகிச்சை முடிந்து குணமடைந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கவும், குடும்பத்துடன் இணைய சாத்தியம் இல்லாதவர்களுக்கு, தேவையான ஆதரவையும், பாதுகாப்பையும் வழங்க, இக்கொள்கை வலியுறுத்துகிறது
இந்த சேவைகளை செயலாக்கத்திற்கு கொண்டு வருவதை பார்வையிட, மாநில மனநல ஆணையத்திற்கும், மாவட்ட அளவில் கண்காணிக்க, மாவட்ட மனநல குழுவிற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
இந்த கொள்கை வாயிலாக, ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சேவைகளை வழங்கி, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.