ADDED : மே 07, 2024 10:52 PM
சென்னை:'மூன்றாண்டு காலத்தில், நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்ன என்பதற்கு, தினமும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்று, மூன்றாண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
மூன்றாண்டு காலத்தில், நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்ன என்பதற்கு, தினமும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி.
திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை, நான் சொல்வதை விட, பயனடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு. ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று கருணாநிதி சொன்னார். இந்த மூன்றாண்டு காலத்தில், ஸ்டாலின் என்றால் செயல் என, நிரூபித்துக் காட்டி உள்ளேன்.
எப்போதும் நான் சொல்வது, இது என் அரசு அல்ல; நம் அரசு. அந்த வகையில், நம் அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என உறுதியேற்று, ஆட்சிப் பயணத்தை, உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

