'தமிழர்களே கீழடிக்கு வருக': முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
'தமிழர்களே கீழடிக்கு வருக': முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
UPDATED : செப் 29, 2024 08:15 AM
ADDED : செப் 29, 2024 03:04 AM

சென்னை: 'உலகெங்கும் வாழும் தமிழர்களே, கீழடிக்கு வருக நம் வரலாற்றை பருக' என, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, தன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் சிவகங்கை மாவட்டம் கீழடியில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், 18.8 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய, 11,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள், கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிரக் கண்டுகளிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது திராவிட மாடல் அரசுக்கு பெருமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்பதிவை, முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, 'உலகெங்கும் வாழும் தமிழர்களே, கீழடிக்கு வருக நம் வரலாற்றை பருக' என, அழைப்பு விடுத்துள்ளார்.