ADDED : மார் 08, 2025 12:34 AM
சென்னை:வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மீன் பிடிக்க சென்ற, 14 மீனவர்கள், கடந்த, 6ம் தேதி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்; மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, இது, ஒன்பதாவது முறை. இன்றைய நிலவரப்படி, 227 மீன்பிடி படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை பிடியில் உள்ளனர்.
இலங்கையில் தமிழக மீனவர்கள், நீண்ட காலத்திற்கு சிறை வைக்கப்பட்டு உள்ளதோடு, அவர்களை விடுவிக்க அதிகபட்ச அபராதம் விதிக்கின்றனர்.
எனவே, இலங்கை சிறையில் உள்ள, அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.