தலைமை கண்டிப்பு: ராகுல் குறித்த பதிவை நீக்கினார் செல்லுார் ராஜு
தலைமை கண்டிப்பு: ராகுல் குறித்த பதிவை நீக்கினார் செல்லுார் ராஜு
UPDATED : மே 23, 2024 01:51 AM
ADDED : மே 23, 2024 01:41 AM
மதுரை:காங்., -- எம்.பி., ராகுலை பாராட்டி, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'எக்ஸ்' தளத்தில் கருத்து வெளியிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அப்பதிவு நீக்கப்பட்டது.
நேற்று முன்தினம் தன் 'எக்ஸ்' தளத்தில் ராகுல் குறித்த வீடியோக்களை வெளியிட்ட செல்லுார் ராஜு, 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்' என பாராட்டு தெரிவித்தார். இது அ.தி.மு.க.,வில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
செல்லுார் ராஜுவோ, 'பழனிசாமி போல ராகுல் எளிமையாக இருப்பதை சுட்டிக்காட்டி, 'இளம் தலைவர்' என பாராட்டினேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை' என்றார். ராகுலை பாராட்டியதற்கு, செல்லுார் ராஜுவுக்கு காங்கிரசார் நன்றி தெரிவித்தனர். இது மேலும் அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று ராகுல் குறித்த வீடியோக்களை, 'எக்ஸ்' தளத்தில் இருந்து செல்லுார் ராஜு நீக்கினார்.
கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'ராகுலை பாராட்டியது செல்லுார் ராஜுவின் தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும், அவர் கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர். அவர் சொன்னது அ.தி.மு.க.,வின் கருத்தாகத்தான் கருதப்படும். இதன் அடிப்படையில், கட்சி தலைமை கண்டித்ததைத் தொடர்ந்து, நேற்று தனது பதிவை நீக்கினார்' என்றனர்.
எல்லாரையும் வாழ்த்துவார்!
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு,
ராகுல் குறித்து அவருடைய சொந்தக் கருத்தை கூறியிருக்கிறாரே தவிர, அரசியல்
ரீதியான கருத்தாக கருதவில்லை. மனதில் பட்டதை கூறி இருக்கிறார். ஆனால்,
எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லோக்சபா தேர்தல் நடக்கும்போது இந்த
கருத்தை அவர் பேசியது ஏன் என்று தெரியவில்லை. வழக்கமாக அனைவரையும்
வாழ்த்துவார். அந்த வகையில் சொல்லி இருப்பார்.
- ராஜன் செல்லப்பா,
மதுரை கிழக்கு மாவட்டச் செயலர், அ.தி.மு.க.,

