குழந்தை மரணத்தில் மறு விசாரணை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
குழந்தை மரணத்தில் மறு விசாரணை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 28, 2024 11:03 PM

மதுரை : மதுரை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மரணம் தொடர்பாக மறு விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி.,க்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், 'தற்போதைய நிலையில் மறு விசாரணைக்கு உத்தரவிட இயலாது. கீழமை நீதிமன்றம் முடிவெடுக்கும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் குழந்தை 2008 ல் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தது. அது மாயமானது. ஒரு கால்வாயில் குழந்தை பிணமாக கிடந்தது. அணிந்திருந்த காதணிகள், கொலுசு காணவில்லை. மர்மமான முறையில் இறந்ததாக ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிந்தனர்.
குவாரிக்காக நரபலி கொடுக்கும் நோக்கில் குழந்தையைக் கடத்தி தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் திருப்தி அடையாததால் சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு வழக்கை மாற்றக்கோரி குழந்தையின் தந்தை உயர்நீதிமன்றத்தில் 2013 ல் மனு செய்தார். அது நிலுவையில் இருந்த காலகட்டத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக கொலை, ஆட்கடத்தல், சாட்சியத்தை மறைத்தல் பிரிவுகளில் கீழமை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி 2017 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம்சாட்டப்பட்ட நபர் விபத்து ஏற்படுத்தியதில் குழந்தை மரணமடைந்ததாகக்கூறி அவருக்கு எதிராக கொலையல்லாத மரணம் விளைவித்தல், திருட்டு மற்றும் சாட்சியத்தை மறைத்தல் பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
குழந்தையின் தந்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: போலீசார் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புள்ளது. முறையாக விசாரித்தால் உண்மை வெளிவரும். மறு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மதுரை (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் மனு செய்தேன். மற்றொருவர் பெயரை குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்த்த அந்நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிடத் தவறி விட்டது. அந்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து மறு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எம்.தண்டபாணி: தற்போதைய நிலையில் மறு விசாரணைக்கு உத்தரவிட இயலாது. வழக்கு விசாரணை மகளிர் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்நீதிமன்றம் முடிவெடுக்கும். இவ்வாறு உத்தரவிட்டார்.

