தங்கத்தை அபகரிக்க முயன்ற 'குருவி' ஏர்போர்ட்டில் கைகலப்பு; 2 பேர் கைது
தங்கத்தை அபகரிக்க முயன்ற 'குருவி' ஏர்போர்ட்டில் கைகலப்பு; 2 பேர் கைது
ADDED : ஆக 16, 2024 12:59 AM

சென்னை:சென்னை விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை, 'குருவி'யே அமுக்க முயன்றதால் ஏற்பட்ட மோதலில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணி யர் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த ஒரு பயணியும், வெளியே காத்திருந்த நபரும் திடீரென வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டனர்.
அவர்களை, விமான நிலைய காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர். சிங்கப்பூரில் இருந்து வந்தவர், தங்கம் கடத்தலில் குருவியாக செயல்படும் கடலுார் மாவட்டம், கஞ்சிராங்குளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 23, என்பது தெரியவந்தது.
அவரிடம் சிங்கப்பூரில் உள்ள ஒருவர், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 700 கிராம் தங்கத்தை சட்ட விரோதமாக கொடுத்து அனுப்பி உள்ளார். இந்த தங்கத்தை, சென்னையை சேர்ந்த கலீல் அலி, 34, என்பவரிடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார்.
ஆனால், கோவிந்தராஜ் தங்கத்தை ஆட்டைய போட முயற்சித்துள்ளார். அதற்காக, கலீல் அலி கேட்டபோது, 'சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபடாமல் இருக்க, விமான நிலைய கழிப்பறையில் தங்கத்தை வைத்து விட்டு வந்து விட்டேன்' என்று, கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசாரும் தங்கம் எங்கே என்று கேட்ட போது, 'என் நண்பரிடம் கொடுத்து அனுப்பி விட்டேன்' என, கோவிந்தராஜ் நாடகமாடி உள்ளார். சோதனையில் அவரது, பேண்ட் பின்பக்க பாக்கெட்டில் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கோவிந்தராஜ், கலீல் அலி ஆகியோர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.