10ம் வகுப்பு தமிழ் தேர்வு: 17,633 பேர் 'ஆப்சென்ட்'
10ம் வகுப்பு தமிழ் தேர்வு: 17,633 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 26, 2024 08:58 PM

சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கின. முதல் நாள் தமிழ் தேர்வில், 17,633 மாணவ -மாணவியர், 'ஆப்சென்ட்' ஆகினர். இவர்களில், பள்ளி மாணவர்கள், 16,314 பேர்; தனி தேர்வர்கள், 1,319 பேர். தமிழ் தேர்விலேயே இவ்வளவு பேர், 'ஆப்சென்ட்' ஆனது, ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது.
கடந்த, 2022 பத்தாம் வகுப்பு தேர்வில், 42,000 பேர் தமிழ் தேர்வுக்கு வராமல் இருந்தனர். 2023ல், 50,000 பேர் தேர்வு எழுத வரவில்லை.
'ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க, 10ம் வகுப்பு தேர்வு மற்றும் அதன் மதிப்பெண் குறித்த முக்கியத்துவத்தை, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.
இதன் விளைவாக ஆப்சென்ட் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளை விட குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தமிழ் வினாத்தாள் குறித்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் நீ.இளங்கோ கூறியதாவது:
இந்த ஆண்டு தமிழ் வினாத்தாள், மாணவர்களுக்கு எளிமையாக விடை எழுதும் வகையில் இருந்தது. மாணவர்களின் சிந்தனையை துாண்டும் வகையில், இரு, 'கிரியேட்டிவ்' வகை வினாக்கள் இடம் பெற்றன. பாடங்களின் உள்பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன.
புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களும் பரவ லாக இடம் பெற்றன. சராசரி மாணவ-மாணவியர் தேர்ச்சி மதிப்பெண் எளிதாக பெற்று விடலாம். பாடங்களை முழுமையை, நன்றாக படித்தவர்கள், 'சென்டம்' என்ற முழு மதிப்பெண் பெற அதிக வாய்ப்புள்ளது.
தமிழ் தேர்வும், தமிழ் மதிப்பெண்ணும், மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம். இந்த அடிப்படையில், தமிழ் வினாத்தாள், போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
