ADDED : மே 27, 2024 11:57 PM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில், 141 ரேஷன் கடைகளும், சூளகிரியில், 105ம் இயங்குகின்றன. இங்கு பொருட்கள் வழங்க, 'பயோமெட்ரிக்' கருவியுடன் கூடிய, 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் உள்ளன.
இதில், ஓசூரில், 117, சூளகிரியில், 51 ரேஷன் கடைகளுக்கு புதிய, பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக, நேற்று முன்தினம் பழைய கருவிகள் திரும்ப பெறப்பட்டதால், அக்கடைகள் நேற்று மூடப்பட்டன.
இது குறித்த அறிவிப்பு இல்லாததால், ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து, வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
ஓசூர், சப் - கலெக்டர் பிரியங்கா இன்று புதிய பாயின்ட் ஆப் சேல் கருவிகளை வழங்க உள்ளார். பழைய கருவியில் பயோமெட்ரிக் வசதி தனியாக ஒயர் வாயிலாக இணைக்கப்பட்டிருக்கும்.
புதிதாக வழங்கப்படும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியிலேயே பயோ மெட்ரிக் இருக்கும். நெட்வொர்க், ஓ.எஸ்., மாற்றப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களுக்கு பில் வந்து விடும். இன்று புதிய கருவிகளை வழங்கி, அதை பயன்படுத்த, விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்து விடுவோம்.
அதனால் மூடப்பட்ட ரேஷன் கடைகள், இன்று மாலை முதல் வழக்கம் போல் செயல்படும். மீதமுள்ள ரேஷன் கடைகளுக்கு புதிய, பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.