ADDED : மே 27, 2024 06:28 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர்மழை குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நீடிப்பதால் மேகக் கூட்டங்கள் மலைமுகடுகளை முத்தமிட்ட அழகிய காட்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்த நிலையில் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலே முடங்கினர். இச்சூழலில் இரு நாட்களாக மழையின்றி ரம்யமான சீதோஷ்ண நிலை நீடிக்கிறது.
இதையடுத்து கோக்கர்ஸ்வாக், சிட்டிவியூ பகுதிகளிலிருந்து தரைப்பகுதியில் உள்ள தேனி, பெரியகுளம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளை மேககூட்டங்கள் கடல் நுரை போல் மூடி தழுவிய அழகிய காட்சிகள் உருவாகியது. இவற்றை இங்குள்ள சிட்டி வியூ, கோக்கர்ஸ்வாக் பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.
தொடர்ந்து காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிரும் நிலவியதால் கொடைக்கானலில் குளுகுளு சீதோஷ்ண நிலை தற்போது உருவாகி உள்ளது.

