அரசு ஊழியர் சங்கத்தினருடன் அமைச்சர் குழு பேச்சு; கோரிக்கைகளை முதல்வர் ஏற்பார் என உறுதி
அரசு ஊழியர் சங்கத்தினருடன் அமைச்சர் குழு பேச்சு; கோரிக்கைகளை முதல்வர் ஏற்பார் என உறுதி
ADDED : பிப் 25, 2025 03:38 AM

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்துடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழு, கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துக் கூறி பரிசீலிப்பதாக, உறுதி அளித்துள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டசபையில் அறிவித்தார்.
இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய, அதிகாரிகள் குழுவை அரசு நியமித்தது. இது அலுவலர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது.
அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, இன்று மாநிலம் முழுதும் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தீர்வு காண்போம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ், கயல்விழி அடங்கிய குழுவை, முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். இக்குழுவினர், தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களை நேற்று அழைத்து பேசினர்.
மொத்தம், 21 சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அவர்களிடம், அமைச்சர் வேலு பேசியதாவது:
அரசு ஊழியர்கள், மாநிலத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபடுகின்றனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. உங்கள் கோரிக்கைகளை அரசுக்கு நினைவூட்டுவதற்காக, மறியல் போராட்டம் அறிவித்துள்ளீர்கள்.
அரசுக்கு இடையூறு தர வேண்டும் என்பதற்காக போராட்டம் அறிவிக்கவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் எங்கள் நோக்கம். அரசு ஊழியர்கள் மீது, நேர்மறையான எண்ணங்களை முதல்வர் வைத்துள்ளார்.
இப்பிரச்னையில் சுமுகமான சூழலை ஏற்படுத்த, முதல்வர் விரும்புகிறார். பொருளாதார சூழ்நிலையை கருத்தில் வைத்து, அரசை நடத்த வேண்டி உள்ளது. பொருளாதார நெருக்கடி உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை, முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஊதிய முரண்பாடு
அதன்பின், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்; மனுக்களும் அளித்தனர்.
அது தொடர்பாக, சங்க நிர்வாகிகள் அளித்த பேட்டி:
அமிர்தகுமார், தலைவர், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, மூன்றரை ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஓய்வூதிய திட்டங்களை ஆராய்ந்து, ஒன்பது மாதங்களில் முடிவெடுக்க, குழு அமைக்கப்பட்டது தேவையில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துகிறோம் என, ஒரு வரியில் கூறினால் போதும். கொரோனா காலத்தில், நிதி நெருக்கடியால் நிறுத்தப்பட்ட, சரண் விடுப்பு தொகையை வழங்க வேண்டும்.
வெங்கடேசன், தலைவர், தமிழக தலைமைச் செயலக ஊழியர் சங்கம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சரண் விடுப்பு சலுகையை வழங்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம். ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய அமைத்த குழுவை கலைக்க வேண்டும்.
மணிமேகலை, மாநிலத் தலைவர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி: பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் அரசாணை 243 ரத்து; சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊர்ப்புற நுாலகங்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
சண்முகநாதன், பொதுச்செயலர், தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்: இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு உள்ளது; அதை களைய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ரக் ஷித், ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ - ஜியோ: கடந்த 2002 முதல் 2006ம் ஆண்டு வரை நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, தொகுப்பு ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தணிக்கை தடை என்ற பெயரில், பணி ஓய்வுபெறும்போது, 10 முதல் 15 லட்சம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது; அதை முறைப்படுத்த வேண்டும். மேலும், 21 மாத கால ஊதிய குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
பச்சையப்பன், மாநில தலைவர், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் தலைமை சங்கம்: மக்கள் நல்வாழ்வு, வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பெரிய துறைகளில் டிரைவர் காலி பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. பொது சுகாதார துறையில் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கழிவுநீக்கம் செய்த வாகனங்களுக்கு புதிய வாகனங்களை தர வேண்டும்.
வருவாய் துறையில், முன்னாள் ராணுவ வீரர்களை தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தும் நடைமுறை தொடர்கிறது. ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு நான்கு சீருடைகள், இரண்டு காலணிகள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். பழைய ஓய்வூதிய திட்டம் செயலாக்கம், காலவரையின்றி முடக்கப்பட்ட சரண் விடுப்பு, 21 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்.