தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள 'மெலன்' வங்கிக்கு முதல்வர் அழைப்பு
தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள 'மெலன்' வங்கிக்கு முதல்வர் அழைப்பு
ADDED : செப் 08, 2024 01:51 AM

சென்னை:உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான, 'பி.என்.ஒய்., மெலன் வங்கி' உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் புதிதாக முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
அரசு முறை பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்து வருகிறார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் சிகாகோ நகரில், பி.என்.ஒய்., மெலன் என அழைக்கப்படும், 'தி பேங்க் ஆப் நியூயார்க் மெலன் கார்ப்பரேஷன்' வங்கியின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக அரசுடன் இணைந்து, வங்கி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில், புதிய முதலீடுகள் செய்யுமாறு, முதல்வர் அழைப்பு விடுத்தார். இவ்வங்கி நிதி பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. சொத்து சேவை, கருவூல சேவை, முதலீடுகள் மேலாண்மை போன்ற சேவைகளை செய்து வருகிறது. இதற்கு இந்தியாவில் பல கிளைகள் உள்ளன.
தமிழகத்தில், செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இவ்வங்கி தன் ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக, சென்னையை தேர்வு செய்துள்ளது.
தமிழகத்தில் அதிக அளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால், சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைக்கவும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
சந்திப்பின் போது, அமைச்சர் ராஜா, பி.என்.ஒய்., மெலன் வங்கி துணைத் தலைவர் செந்தில்குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தமிழக தொழில் துறை செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு உடனிருந்தனர்.