கூட்டுறவு வாடகை வாகனங்கள் டிரைவர் கிடைக்காததால் சிக்கல்
கூட்டுறவு வாடகை வாகனங்கள் டிரைவர் கிடைக்காததால் சிக்கல்
ADDED : ஜூன் 20, 2024 09:20 PM
சென்னை:தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 2,938 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு தேவையான டிராக்டர், உழவு இயந்திரங்கள், நெல் நடவு மற்றும் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வற்றை வைத்துள்ளன.
அவற்றை, குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க, 'கோப் இ வாடகை' என்ற சேவை சமீபத்தில் துவக்கப்பட்டது.
அதன்படி, விவசாயிகள் தங்களுக்கு விவசாய இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் தேவையெனில், 'உழவன் மொபைல் செயலி' மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யும் போது, எந்த தேதி, நேரத்திற்கு வேண்டும்; நிலத்தின் பரப்பளவு, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
பின், சம்பந்தப்பட்ட சங்கத்தில் இருந்து, பதிவு செய்த நபரை தொடர்பு கொண்டு, வாடகைக்கு இயந்திரங்கள் வழங்கப்படும்.
இந்நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் டிராக்டர் ஓட்டவும், கருவிகளை இயக்கவும் டிரைவர் உள்ளிட்ட பணியாளர்கள் கிடைப்பதில்லை. இதனால், வாடகைக்கு விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு சங்க செயலர் ஒருவர் கூறியதாவது:
டிராக்டர் வாடகை ஒரு மணி நேரத்திற்கு, 800 முதல், 1,000 ரூபாய் என, இடத்திற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. டிராக்டரை ஓட்ட டிரைவரை அழைத்தால், மணிக்கணக்கில் வர மறுக்கின்றனர். 'எங்களுக்கு நிரந்தரமாக வேலை கொடுத்து, மாத சம்பளம் தரவும்' என்று கேட்கின்றனர்.
இதனால், முன்பதிவு செய்த நபர்களுக்கு உரிய நேரத்தில் சேவை வழங்க சிரமம் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில், உயரதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, சங்கங்களுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

