சமையல் உப்பு விற்பனையில் களமிறங்கியது கூட்டுறவு துறை
சமையல் உப்பு விற்பனையில் களமிறங்கியது கூட்டுறவு துறை
ADDED : மே 25, 2024 08:37 PM
சென்னை:தமிழக அரசின் உப்பு நிறுவனத்தை தொடர்ந்து, கூட்டுறவு துறையும் சமையல் உப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
உலகம் முழுதும் சமையலுக்கு முக்கியமானதாக விளங்கும் உப்புக்கு, அதிக சந்தை வாய்ப்பு உள்ளது. இதனால், பல தனியார் நிறுவனங்கள் உப்பு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசின் உப்பு நிறுவனம், உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு துறையின் கீழ் ஈரோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், 'மங்களம்' என்ற வணிக பெயரில், மஞ்சள், மசாலா பொருட்களை விற்கிறது.
இதேபோல், பல சங்கங் கள், மாவு வகை, சமையல் எண்ணெய் போன்றவற்றை விற்கின்றன. அந்த வரிசையில், துாத்துக்குடி மாவட்டத்தில், ஆறுமுகநேரி உப்பு தொழிலாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், 'கூட்டுறவுப்பு' என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த சமையல் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
ஒரு கிலோ உப்பு பாக்கெட் விலை, 16 ரூபாய். இந்த உப்பு, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடி களில் கிடைக்கும். இதற்காக, ஒவ்வொரு சங்கத்திற்கும், உப்பு தேவை பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.