அடுக்குமாடி சீரமைப்புக்கு கடன் தர தயாராகுது கூட்டுறவு சங்கம்
அடுக்குமாடி சீரமைப்புக்கு கடன் தர தயாராகுது கூட்டுறவு சங்கம்
ADDED : ஜூலை 11, 2024 01:45 AM
சென்னை:சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்யும்போது, அதன் உரிமையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கு, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.
தமிழகத்தில், 680 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்படுகின்றன. இதில் பெரும்பாலான சங்கங்கள், தினசரி செலவுக்கே பணம் இல்லாத நிலையில் தவித்தன. இந்நிலையில், அபராத வட்டி தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கியதால், நிலுவை தொகைகள் வசூலாகின.
புதிய வழிமுறை
இதனால், 200க்கும் மேற்பட்ட சங்கங்கள், புதிய கடன் வழங்கும் நிலைக்கு முன்னேறியுள்ளன. மற்ற வீட்டுவசதி சங்கங்களையும் மேம்படுத்த, புதிய வழிமுறைகளை கண்டறியும் நடவடிக்கைகளை, வீட்டுவசதி துறை முடுக்கி விட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் அதிகரித்துள்ளன.
இதில் பெரும்பாலான இடங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர், சங்கம் அமைத்து, அதன் வாயிலாக புதிய கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்து, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதில் உரிமையாளர்கள் நிலையில், பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன.
இது குறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்த வளாகங்கள் அதன் உரிமையாளர்கள் ஏற்படுத்தும் சங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
இதில், 30, 40 ஆண்டுகள் கடந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு அந்தந்த குடியிருப்பு சங்கங்களே முடிவு எடுக்க முடியும்.
கண்காணித்தல்
ஆனால், கட்டுமான நிறுவனத்தை தேர்வு செய்தல், கட்டுமான பணிகளை கண்காணித்தல் போன்ற நிலைகளில் உதவ, வீட்டுவசதி வாரியம் தயாராக உள்ளது. இதற்கான வழிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், மறுசீரமைப்பு பணிக்கு, வீட்டு உரிமையாளர்கள் அளிக்க வேண்டிய தொகை குறைவாக இருக்கும்.
இத்தொகையை கடனாக வழங்க, வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், இதுபோன்ற கடன்களை வழங்க முடிவு எடுத்துள்ளன. தமிழகத்திலும் இதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்.
புதிய வீடு வாங்குவதற்கு ஆகும் செலவை விட, பாதி அளவுக்கான தொகை தான் என்பதால், அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் இதில் ஈடுபடலாம்.
இதற்கான சாத்தியக்கூறுகள், வழிமுறைகளை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அரசு ஒப்புதல் பெற்று, இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

