ADDED : ஏப் 15, 2024 01:16 AM
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில், அரசியல் கட்சியை துவங்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில், தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பெயரை, கோட் என்று சுருக்கி அழைக்கின்றனர். தற்போது, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. அதில், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை குஷிப்படுத்தும் வகையில் வரிகள் இடம் பெற்றுள்ளன.
'விசில் போடு' என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்த பாடலில், 'பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா.. அதிரடி கிளப்பட்டுமா... கேம்பெய்ன தான் தொறக்கட்டுமா... மைக்கை கையில் எடுக்கப்பட்டுமா' என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
இதுமட்டுமின்றி பாடலில் ஆங்காங்கே,' குடிமக்கள் தான் நம் கூட்டணி, பார்ட்டியை விட்டு போ மாட்ட நீ... லாஸ்ட் சொட்டு உள்ளவரை நம்ம பார்ட்டி ஓயாது. மாற்றம் வேணும்னா கோ வாக்கு... உன் பார்ட்டிக்கு தான் எங்க வாக்கு' என, அரசியல் கலந்த வரிகள் இரட்டை அர்த்தத்தில் எழுதப்பட்டு உள்ளன.
செப்., 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று படத்தை வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில் ஒதுங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, இது உற்சாகத்தை அளித்துள்ளது.

