காபி துாள் விலை விரைவில் ரூ.1,000த்தை தாண்டும் என தகவல்
காபி துாள் விலை விரைவில் ரூ.1,000த்தை தாண்டும் என தகவல்
ADDED : பிப் 15, 2025 12:37 AM
சேலம்:காபி கொட்டை விலை கிடுகிடுவென அதிகரித்துள்ள நிலையில், நாளை மறுதினம் முதல், 'நரசுஸ்' காபி துாள் கிலோ, 980 ரூபாய்க்கு விற்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் காபி துாள் விலை 1,000 ரூபாயை தாண்டும் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காபியில், 70 சதவீதம் வரை ஏற்றுமதியாகிறது. காபி ஏற்றுமதி நாடுகளில், இந்தியா, ஐந்தாம் இடத்தில் உள்ளது.
அதனால், சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படும் ஏற்றுமதி விலையை பொறுத்தே, உள்ளூர் காபி விலை மாறுபடுகிறது. கடந்த டிசம்பர் முதல், நம்நாட்டில் காபி அறுவடை துவங்கியது.
கடந்த ஆண்டை விட உற்பத்தி அதிகரித்திருந்தாலும், ஏற்றுமதிக்கு அதிக வரவேற்பு உள்ளதால், காபி கொட்டை விலை, இரு மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விலை உயர்வு
நம் நாட்டில், 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட காபி கொட்டைகளை கர்நாடகா உற்பத்தி செய்கிறது. அதனால், சிக்மகளூரு மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையே, நாடு முழுவதுக்குமான அடிப்படை விற்பனை விலையாக உள்ளது.
கடந்த டிசம்பர் 10ல், 'ஏஏ' ரகம் காபி கொட்டை விலை கிலோ, 535 ரூபாயாக இருந்தது. நேற்று அதே ரக காபி கொட்டை விலை, 760 ரூபாயாக உயர்ந்தது.
இரு மாதத்தில் கிலோவுக்கு, 225 ரூபாய் அதிகரிப்பால், காபி துாள் விலை 'கிடுகிடு'வென உயர துவங்கியுள்ளது.
டிசம்பருக்கு முன் வரை, 625 ரூபாய்க்கு விற்ற, 'பியூர்' காபி துாள், கடந்த மாதம் 760 ரூபாயாக உயர்ந்தது. சர்வதேச அளவில் தொடரும் பற்றாக்குறையால், காபி விலை குறைய வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. இதனால், முன்னணி காபி நிறுவனங்கள், மீண்டும் காபி துாள் விலையேற்றத்தை அறிவித்து வருகின்றன.
குறிப்பாக, காபி துாள் விற்பனையில் முன்னணி நிறுவனமான 'நரசுஸ்' நாளை மறுதினம் முதல், விலை ஏற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது கிலோ, 840 ரூபாய்க்கு விற்கும் 'பியூர்' காபி துாள், 980 ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கட்டாயத்தில் உள்ளோம்
சேலம் லட்சுமி காபி நிர்வாக இயக்குனர் ராகவன் கூறியதாவது:
இதுவரை இல்லாத அளவு, சர்வதேச அளவில் காபிக்கு வரவேற்பு அதிகரித்து உள்ளது. ஏற்றுமதி விலை அதிகரிக்கும் போது, இங்குள்ள மார்க்கெட்களில் விலை அதிகரிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் காபி கொட்டை விலைக்கேற்ப, காபி துாள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
காபி நிறுவனங்கள், 'ஸ்டாக்' வாங்கி வைத்து உள்ளதால் அவை தீரும் வரை, பழைய விலையில் விற்று வருகின்றன. புது காபி கொட்டையை கொள்முதல் செய்து, காபி துாள் தயாரிக்கும் போது விற்பனை விலை, கிலோ 1,000 ரூபாயை தாண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காபி துாள் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், ஹோட்டல்கள், டீக்கடைகளில் காபி விலை உயர்த்தப்படும் நிலை உள்ளது.