பாலம் கட்டுமான பணியில் சரிந்து விழுந்த இரும்பு சாரம்
பாலம் கட்டுமான பணியில் சரிந்து விழுந்த இரும்பு சாரம்
ADDED : ஏப் 14, 2024 04:06 AM

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் - மணல்மேடு இடையே பாலம் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து விழுந்தது.
மணல்மேடு, பெத்தானேந்தல், சடங்கி உள்ளிட்ட கிராம மக்கள் திருப்புவனம் வர மடப்புரம் வழியாக 10 கி.மீ., சுற்றி வர வேண்டும். மாணவர்கள், விவசாயிகள் என பலரும் மணல்மேடு அருகே வைகை ஆற்றில் இறங்கி நடந்து, லாடனேந்தல் வந்து திருப்புவனம் சென்று வந்தனர்.
மணல்மேடு - லாடனேந்தல் இடையே பாலம் அமைத்தால் 3 கி.மீ., துாரம் தான் வரும். எனவே இந்த இடத்தில் பாலம் கட்ட வேண்டும் என, கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடினர்.
இதையடுத்து நபார்டு வங்கி நிதியுதவியுடன் பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, 18.70 கோடி ரூபாய் செலவில், 2022 ஜூலை கட்டுமான பணிகள் துவங்கின.
இரண்டு துாண்களுக்கு இடையே கான்கிரீட் டெக் அமைக்க நேற்று சிமென்ட் கலவை கொட்டப்பட இருந்த நிலையில், இரும்பு சாரம் அப்படியே சரிந்து விழுந்தது. தொழிலாளர்கள் யாரும் வராததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
பாரம் தாங்காமல் சரிந்துள்ளது. பாலம் கட்டுமான பணிகளை தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

