கோவையில் தேர்தல் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
கோவையில் தேர்தல் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
ADDED : மே 08, 2024 01:52 AM
கோவை:கோவை லோக்சபா தொகுதியில், ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுச்சாவடியில் பயன்படுத்திய பொருட்களை, மண்டல குழுவினர் பெற்று, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணிக்கை மையமான, ஜி.சி.டி., கல்லுாரிக்கு, லாரிகளில் எடுத்து வந்தனர்.
அவற்றை, சட்டசபை தொகுதி வாரியாக பெற்று, 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைத்து, சீலிடுவதற்கு வரவேற்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது. இப்பணியில் ஏராளமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு பணியாற்றிய, தற்காலிக பெண் ஊழியரை, அரசு அலுவலர்கள் இருவர், பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
வடக்கு தாலுகா அலுவலகம் மற்றும் அரசு மகளிர் கல்லுாரியில் வைத்து, அந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் நடந்துள்ளது. இதை துணை தாசில்தார் ஒருவர் நேரில் பார்த்து கடுமையாக கண்டித்தார். உடனே, இரு அலுவலர்களும் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர்.
இச்சம்பவம், அரசு அதிகாரிகள் மத்தியில் சமீபத்தில் கசிய ஆரம்பித்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு சென்றதும், அவர் நடத்திய விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள், அவர்கள் வகிக்கும் பதவி விபரங்கள், நேரில் பார்த்த சாட்சி உள்ளிட்ட விபரங்கள் தெரிந்தது.
இதுதொடர்பாக, துறை ரீதியாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கோவிந்தனுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

