போதை மாத்திரைகள் 'சப்ளை'யில் கோலோச்சிய சேலம் முக்கிய புள்ளி
போதை மாத்திரைகள் 'சப்ளை'யில் கோலோச்சிய சேலம் முக்கிய புள்ளி
ADDED : மார் 31, 2024 03:02 AM

சென்னை: 'எல்.எஸ்.டி., ஸ்டாம்ப்' போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த, சேலத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளி, நம்நாட்டில் பல மாநிலங்களுக்கு, போதை மாத்திரைகள், 'சப்ளை' செய்து வந்தது தெரியவந்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 50. திருமணமாகாதவர். இவர், 2021ல், போதை பொருள் கடத்தல் தொடர்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் வெளியே வந்தார்.
2023 நவம்பரில் இருந்து, 'டார்க்நெட்' இணையதளம் வாயிலாக, ஜெர்மனியில் இருந்து, எல்.எஸ்.டி., என்ற ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள் கொள்முதல் செய்து, இந்தியா முழுதும், 'சப்ளை' செய்து வந்தார்.
சமீபத்தில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பாலாஜியை கைது செய்தனர். இவருடன், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை; ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்; கேரள மாநிலம் கொச்சி; குஜராத் மாநிலம் சூரத் ஆகிய இடங்களில், சினிமா பட உதவி இயக்குனர், பொறியாளர்கள் என, 20 - 25 வயதுடைய, 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தலைவனாக பாலாஜி செயல்பட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து, 1 கோடி மதிப்புள்ள, எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதை பொருள் கொள்முதல் செய்ய, கிரிப்டோகரன்சி வாயிலாக, பாலாஜி பணப்பரிமாற்றம் செய்து வந்துள்ளார். இவர், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்யும் முக்கிய புள்ளியாகவும் செயல்பட்டுள்ளார்.
இதுகுறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள போதை பொருள் கடத்தல் புள்ளிகளில் பாலாஜி மிகவும் முக்கியமானவர். இவரது கூட்டாளிகள் நாடு முழுதும் உள்ளனர். அனைவரும் சமூக அந்தஸ்து பெற்றவர்கள்.
டாக்டர், பொறியாளர், மென்பொறியாளர்கள் என, பல தரப்பினரும் உள்ளனர். பாலாஜியின் கூட்டாளிகள் கைதான இடங்கள் அனைத்திலும், போதை மாத்திரைகள் புழக்கம் அதிகம் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பாலாஜியின் பிரதான தொழிலே, போதை மாத்திரைகள் சப்ளை செய்வது தான். துவக்கத்தில், 'மாவா' எனும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பாலாஜி, அதன்பின் போதை மாத்திரை வியாபாரியாக மாறியுள்ளார்.
போதை மாத்திரையை விட, எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் விற்பனையில் அதிக லாபம் கிடைத்துள்ளது. இதனால், அதில் கவனம் செலுத்தி உள்ளார். இவரது கூட்டாளிகளை கண்காணித்து வருகிறோம்; விரைவில் சிக்குவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

