ADDED : மார் 06, 2025 11:57 PM
சென்னை:தமிழ்நாடு வணிக வரி பணியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் பொதுச்செயலர் டேனியல் ஜெயசிங் கூறியதாவது:
வணிக வரித்துறையில் மறுசீரமைப்பிற்கு பின், வரி விதிப்பு வட்டங்களில் உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தாளர் போன்ற பணியிடங்களை, அரசு குறைத்துள்ளது.
இதனால், தற்போது பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதால், அன்றாட பணிகளை நிறைவு செய்ய இயலாமல், பலரும் அலுவலக நேரத்திற்கு பின், வீட்டுக்கு சென்று பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கூறியும், ஆய்வு கூட்டம் நடத்துவதை அவர்கள் கைவிடவில்லை.
எனவே, ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் வார இறுதிநாளான சனிக்கிழமை நடத்தப்படும் ஆய்வு கூட்டத்தை எதிர்த்து, ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று விடுப்பு எடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.