மருத்துவமனைகளில் பாதுகாப்பு உறுதி செய்ய ஆணையம் உத்தரவு
மருத்துவமனைகளில் பாதுகாப்பு உறுதி செய்ய ஆணையம் உத்தரவு
ADDED : ஆக 15, 2024 02:39 AM
சென்னை:மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி வளாகங்களில், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில், அரசு மருத்துவ கல்லுாரியில், பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு, நாடு முழுதும் டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய செயலர் ஸ்ரீனிவாஸ், மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மருத்துவ கல்லுாரிகளில், டாக்டர்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் தொடர்கின்றன. டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என, அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை, மருத்துவ கல்லுாரி நிர்வாகங்கள் வகுக்க வேண்டும்.
புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவ துறைகள், விடுதி, கல்லுாரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் செயல் திட்டங்கள் இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்தல் அவசியம்.
போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில், ஆண், பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். மாலை வேளைகளில், மருத்துவ கல்லுாரி வளாகங்களில், பாதுகாப்பாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வர வழி வகை செய்வது அவசியம்.
மருத்துவ கல்லுாரி மாணவர்கள், டாக்டர்கள், ஊழியர்களுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்வுகளை, சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுப்பது கட்டாயம். அதுதொடர்பாக போலீசில் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
மருத்துவ பணியிட பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.