ADDED : செப் 10, 2024 10:53 PM
சென்னை,:மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களிடம் இருந்து கண்களை தானம் பெறுவதற்கு, சிறப்பு குழுக்கள் அமைக்க மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
மின்னணு பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கண்களில் ஏற்படும் நீர் வறட்சி, கருவிழி பாதிப்பு உள்ளிட்டவற்றால், ஆண்டுக்கு 9,000 பேர் வரை பார்வை இழப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
கண்கள் தானம் கிடைத்தாலும் அனைவருக்கும் பொருத்த முடிவதில்லை.
வடமாநிலங்களை போல, தமிழகத்தில் கண் தானம் வேண்டி காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றாலும், அனைவருக்கும் பார்வை கிடைக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது.
எனவே, ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் சிறப்பு குழு அமைத்து, உயிரிழந்தவரின் உறவினர்களிடம் சம்மதம் பெற்று, கண் தானம் பெற முயற்சி எடுக்கப்பட உள்ளது.
இதற்காக சிறப்பு குழு அமைக்கப்படுவதுடன், அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

