அறிவித்தபடி அதிகமான பஸ்கள் இயக்காததால் வெளியூர் பயணியர் அவதி
அறிவித்தபடி அதிகமான பஸ்கள் இயக்காததால் வெளியூர் பயணியர் அவதி
ADDED : ஏப் 19, 2024 10:46 PM
சென்னை:சென்னையில் இருந்து இரண்டு நாட்களில், 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அதேநேரம், சென்னையில் நேற்று போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால், பயணியர் அவதிபட்டனர்.
லோக்சபா தேர்தலையொட்டி, அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டது.
இதனால், சென்னையில் பெரும்பாலான நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, மாநிலம் முழுதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 17, 18ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் உட்பட, 10,214 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டது.
கடந்த 17ம் தேதி இயக்கப்பட்ட பஸ்களில், 1:50 லட்சம் பேர் பயணித்தனர். தேர்தலுக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து வழக்கமாக 2,092 பஸ்கள்; 1,785 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
கடலுார், சிதம்பரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் நடைமேடைகளில் மக்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. கூட்டம் அதிகமானதை தொடர்ந்து, போதியளவில் பஸ்கள் இல்லை என, பயணியர் நேற்று நள்ளிரவில், தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின், மாநகர பஸ்கள் வாயிலாக, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தேர்தலையொட்டி இயக்கப்பட்ட, 7,299 சிறப்பு பஸ்கள் வாயிலாக, இரண்டு நாட்களில் சென்னையில் இருந்து, 4 லட்சத்து, 3,800 பேர் பயணித்துள்ளனர். இதில், நேற்று முன்தினம் மட்டும், 2 லட்சத்து 55,000 பேர் பயணித்துள்ளனர்.
பஸ்களை திட்டமிட்டப்படி இயக்க, போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள், பொது மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், 24 மணி நேரமும் முகாமிட்டு, பயணியரை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கும் கூடுதல் ரயில்களும், சில ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

